உலகில் பல சித்தாந்தங்கள் உள்ளன. கம்யூனிச சித்தாந்தம், சோசலிச சித்தாந்தம் என்று பல இருக்கின்றன. சித்தாந்தம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். கவிஞர் கண்ணதாசன் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்: “தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்; தெரியாமல் போனாலே அது வேதாந்தம்” என்று. சித்தாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது, தத்துவம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தத்துவம் என்றால் பிலாசபி (Philosophy).
தத் + துவம். தத் என்றால் உள்ளது; துவம் என்றால் தன்மை. எனவே, தத்துவம் என்றால் உள்ளதாம் தன்மை. உள்ளதாம் தன்மையே உண்மை. சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது என்றால், உண்மையைத்தான் சொல்கிறது; இன்மையைச் சொல்லவில்லை. இல்லாதது எதையும் சொல்லவில்லை. ஏனெனில், சைவ சித்தாந்தத்திலே இல்லாத பொருள் என்று எதுவுமே இல்லை. எல்லாமே உள்பொருள். உள்பொருள், உள் பொருள் என்றே பேசுகிறது. இதுதான் சைவ சித்தாந்தத்தின் தனிச்சிறப்பு. இந்தக் கொள்கை, உலகப் பொருட்களைப் புரிந்துகொள்ள ஒரு தெளிவான வழியை வழங்குகிறது.
1. ஐம்பொருள் உண்மை: அனாதிப் பொருள்கள்
சைவ சித்தாந்தம் இல்லது தோன்றாது என்ற கொள்கையை ஆணித்தரமாக நிலைநாட்டுகிறது. இல்லாத ஒன்று என்பதே கிடையாது. எல்லாமே உள்ள பொருட்களே. இந்தக் கொள்கை மிகவும் முக்கியமானது. சைவ சித்தாந்தம் உலகில் உள்ள பொருட்களைப் பின்வருமாறு ஐந்து வகையாகப் பிரிக்கிறது. இந்த ஐந்து பொருட்களும், என்றும் உள்ள, தோற்றமும் முடிவும் இல்லாத அனாதிப் பொருள்கள் ஆகும்.
கடவுள் (பதி): கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவராக (அறிவுள்ளவர்) இருக்கிறார். அவர் தெளிவானவர்.
உயிர் (பசு): நாமெல்லாம் அறிவு அறியாமல் இருக்கிறோம்.
ஆணவம் (பாசம்): நம்மகிட்ட அறியாமை இருக்கிறது; கடவுள் கிட்ட அறியாமை கிடையாது. இந்த ஆணவ மலமே உயிரை அறியாமையில் அழுத்துகிறது.
கன்மம் (பாசம்): வினை அல்லது கர்மம். இது இன்ப துன்பங்களைக் கொடுக்கிறது.
மாயை (பாசம்): உயிரைப் பிறவிக் காலங்களில் அறிவைச் செய்கின்ற மாயை. இது உடலை இயக்குகிறது.
கடவுள், உயிர், ஆணவம், கன்மம், மாயை எனப்படும் இந்த ஐந்து பொருட்களும் தனித் தனிப் பொருட்கள். ஒன்றிலிருந்து ஒன்று தோன்றாதது. இவைகளுக்கு அனாதிப் பொருட்கள் என்று பெயர். அனாதிப் பொருட்கள் என்றால் தோற்றமும் முடிவும் இல்லாத என்றும் உள்ள நிலையான பொருட்கள் ஆகும். கடவுளும் உயிர்களும் வேறானவை. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் ஆணவம் எனும் மலமே.
2. தீயவை தீண்டா தத்துவம்: திருக்குறள் சான்று
சைவ சித்தாந்தம் போற்றும் இந்த ஐம்பொருள் உண்மையை, தெய்வப் புலவர் திருவள்ளுவரும் தனது குறள்களில் வலியுறுத்தியுள்ளார். இது, சங்க இலக்கியங்கள் மற்றும் நீதி நூல்களிலும் இத்தத்துவத்தின் ஆழம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காட்டுகிறது.
குறள் 5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இக்குறளில், ‘இருள்’ என்றால் ஆணவம், ‘சேர் இருவினை’ என்றால் கன்மம், ‘இறைவன்’ என்றால் கடவுள். இவ்வாறு 3 பொருட்களைச் சொல்லியிருக்கிறார்.
குறள் 35: பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.
இக்குறளில், ‘மருள்’ என்றால் மாயை, நான்காவது பொருளைச் சொல்லியிருக்கிறார்.
குறள் 244: மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
இக்குறளில், ‘மன்னுயிர்’ என்றால் என்றும் உள்ள உயிர். இது ஐந்தாவது பொருளையும் சொல்லி இருக்கிறார்.
ஆக, திருவள்ளுவர் 5 பொருட்களைப் பற்றியும் கூறியதன் மூலம், சைவ சித்தாந்தத்தின் ஐம்பொருள் கொள்கைக்கு வலிமை சேர்க்கிறார்.
3. அளவை முறை: உண்மையை நிறுவுதல்
சைவ சித்தாந்தம் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வதற்கு, அது உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த சில அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது. பொருள்களை நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஒரு முறை இருக்கிறது. அதற்கு அளவை முறை என்று பெயர். எல்லா மனிதர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மூன்று விதமான அளவை முறைகளை சைவ சித்தாந்தம் கைக் கொள்கிறது.
காண்டல் அளவை: எதையும் கண்ணால் கண்ட பின் ஏற்றுக் கொள்வது.
கருதல் அளவை: உதாரணமாக, மலையில் தீப் பிடித்து எரிகிறது. நெருப்புத் தெரியவில்லை. ஆனால் புகை வருகிறது. புகை வருவதாலே அங்கே நெருப்பு இருக்கிறது என்று கருதுகிறோம். இது யூகித்து அறிதல் என்பதாகும். சைவ சித்தாந்தம் கருதல் அளவையை வைத்துத்தான் கடவுள் உண்டு என்பதை நிரூபிக்கிறது. இந்த முறை அறிவியலுக்கும், தத்துவத்திற்கும் பொதுவானது.
நூல் அளவை: நம்மை விடப் பெரியவர்கள், ஆழ்ந்து அனுபவித்தவர்கள், மெய்ஞ்ஞானிகள் அவர்களெல்லாம் சொல்லி வைத்தவை. அவர்கள் சொன்னதை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இதுதான் நூல் அளவை.
4. சற்காரிய வாதம்: சைவ சித்தாந்தத்தின் அறிவியல் அடிப்படை
சைவ சித்தாந்தத்தின் இன்னுமொரு அடிப்படையான கொள்கை சற்காரிய வாதம். இது மிக மிகப் பெரிய அறிவியல் அடிப்படையில் ஆன கொள்கை. சத்து என்றால் என்றும் உள்ளது. காரியம் என்றால் செயல்படுவது. வாதம் என்றால் கொள்கை. சத்து + காரியம் + வாதம் – சற்காரிய வாதம்.
இன்மை தோன்றாது: விஞ்ஞானம் எந்த ஒரு பொருளையும் இல் பொருள் என்று கூறவில்லை. இன்மையிலிருந்து எதுவும் தோன்றாது. அதாவது இல்லாத பொருளிலிருந்து எதுவும் தோன்றாது. இதை ஆங்கிலத்தில் “Nothing is evolved from nothing” என்று சொல்வார்கள். இதுவே படைப்பிற்கு முந்தைய நிலையைக் குறிக்கிறது.
உள்ளதே சிறக்கும்: இல்லது தோன்றாது, உள்ளதே சிறக்கும். இல்லாத பொருள் என்றுமே தோன்றுவதில்லை. உள்ள பொருள்தான் வளர்ச்சியுறும்.
காரண – காரிய நிலை: ஒரு பொருள் தோன்றுவதற்கு முன்பும் உள்ளது. தோன்றுதல் என்றால் காரியப்படுவது. செயல்படுவது. முன்பு காரண நிலையில் இருந்திருக்கிறது. காரண நிலை என்றால் சூக்குமமாய் இருத்தல். விஞ்ஞானத்தின் Capsule theory யும் பெருவெடிப்புக்கு முன்பு இந்த உலகம் ஒரு காப்சூல் அளவில் இருந்தது என்கிறது.
ஒவ்வொரு பொருளுக்கும் இந்த நிலைகள் இருக்கின்றன: 1. காரணநிலை, 2. காரிய நிலை, 3. சுத்த நிலை. சத்து காரியம் வாதம் ஆங்கிலத்தில் Cause and Effect theory என்று சொல்வார்கள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இதுவே சற்காரிய வாதம்.
சைவ சித்தாந்தம் ஒரு வாழ்க்கைக் கல்வி. இளமையிலேயே இது பற்றி அறிய வாய்ப்புக் கிடைத்தால் இளைஞர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பயனுள்ளதாக இருக்கும். இலங்கை போன்ற நாடுகளில் சைவ சித்தாந்த சாத்திரங்கள் பள்ளிகளில் பாடமாக உள்ளன. பள்ளிகளில் சமயக் கல்வியை அறிமுகப்படுத்துவது வரும் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணியாகும். நிம்மதியாக வாழ்வதும், வாழ்வின் நிறைவில் இறைவனை அடைவதும் சைவ சித்தாந்தமே காட்டும் உண்மை வழிகாட்டியாகும்.
மேலும் படிக்க ..
![]()








No comments yet.