இளமையை விட முதுமை அழகானது; இளமை அழியக்கூடிய அழகினை நிலையானது என்று கருதும். ஆனால், முதுமையோ அழியாத அறிவையே நிலையானது என்று எண்ணும். அழகு கொண்டு நிகழும் காதலை விட, அறிவு கொண்டு நிகழும் காதலே உயர்வானது. பணத்தைப் பெரிதாக எண்ணும் இளமையை விட, குணத்தைப் பெரிதாக எண்ணும் முதுமை மேன்மையானது. இவ்வாறு, அனைத்து நிலைகளிலும் முதுமையே பெருமைக்குரியதாக விளங்குகிறது. அந்த முதுமையின் அருமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய், காலத்தால் அழியாத புகழுடன் வாழ்ந்து வழிகாட்டியவர் சங்கப் புலவர் ஔவையார். அவருடைய இலக்கியப் பங்களிப்பும், வாழ்வியல் நெறிகளும் சங்க காலத் தமிழின் தங்கப் பக்கங்களாய் மிளிர்கின்றன.
தூதுவரின் இலக்கணம்: ஔவையின் அறிவுத்திறன்
‘தூது’ என்னும் சொல் தமிழ் மொழியில் அமைந்த மிகச்சிறப்பான ஒன்றாகும். நெடிலும் குறிலும் இணைந்த இந்தச் சொல், எங்கு நீட்டிப் பேச வேண்டும், எங்கு குறுக்கிப் பேச வேண்டும் என்பதை அறிந்து பேசும் திறனுடையவரே தூதுக்குரியவர் என்பதை உணர்த்துகிறது. தன் நாட்டினை எவ்விடத்திலும் உயர்த்திக் காட்டும் நுட்பமான அறிவுடையவரே சிறந்த தூதர் ஆவார். அத்தகைய சிறப்புமிக்க இலக்கணங்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்து காட்டியவர் ஔவையார்.
“தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.” – குறள் 685
என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர். தொண்டைமான் இளந்திரையனிடம், அதியமான் நெடுமான் அஞ்சியின் தூதுவராகச் சென்றபோது, ஔவையார் கையாண்ட ராஜதந்திரம் அவரது அறிவுக்கூர்மைக்குச் சிறந்த சான்றாகும். போரை விரும்பிய தொண்டைமானிடம், தன் மன்னனின் பெருமையை மிக நுட்பமாகவும், அதே சமயம் அவனை அச்சுறுத்தும் வகையிலும் அவர் எடுத்துரைத்தார்.
“களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.” – புறநானூறு 87
“பகைவர்களே! போர்களத்தில் எங்களுடன் மோதுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், எம்முடைய படையில் ஒரு வீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் ஒரு தச்சன், ஒரு மாதம் முழுவதும் முயன்று ஒரு தேர்ச்சக்கரத்தைச் செய்தால் அது எவ்வளவு வலிமையானதாக இருக்குமோ, அத்தகைய வலிமை கொண்டவன் அவன்” என்று மிக அழகாக அதியமானின் வீரத்தை உவமை நயத்துடன் விளக்குகிறார். இங்கு, நேரடியாக “என் மன்னன் வலிமையானவன்” என்று கூறாமல், உவமையின் மூலம் பகைவனின் மனதில் ஒருவித அச்சத்தை விதைத்து, போரைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதுவே ஒரு சிறந்த தூதரின் இலக்கணமாகும்.
அதியமானின் கொடைத்திறனும், ஔவையின் அன்பும்
அதியமான், வீரத்தில் மட்டுமல்லாது கொடைத்தன்மையிலும் தலைசிறந்து விளங்கினான். தன் வாழ்நாளை நீட்டிக்கும் சக்தி வாய்ந்த கருநெல்லிக்கனியைத் தான் உண்ணாமல், தமிழ் வாழ வேண்டும், தமிழ்ப் புலவர்கள் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், அதை ஔவையாருக்குக் கொடுத்தான். மன்னனாகத் தான் இருந்து நாட்டைக் காப்பதை விட, ஔவையார் புலவராக இருந்து மக்களைக் காப்பதே பெரும் பயனைத் தரும் என்று அவன் எண்ணினான். சிவனின் பெருங்குணம் போல, தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்த அந்தப் பெருங்குணத்தை, ஔவையார் பின்வரும் பாடலில் போற்றுகிறார்.
“சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.” – புறநானூறு 91
தന്റെ உயிரைக் காக்காமல், എന്റെ உயிர் நீங்காமல் இருக்கக் கொடுத்தாயே என்று ஔவையார் நெகிழ்ந்து பாடுகிறார்.
உடைந்த வேலே அழகு!
மற்றொருமுறை, தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டி ஔவையாரிடம் பெருமையடித்துக் கொண்டான். நெய் பூசப்பட்டு, மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, புத்தம் புதிதாக இருந்த தன் ஆயுதங்களைக் காட்டி மார்தட்டினான். அதைக் கண்ட ஔவையார் சிறிதும் அஞ்சாமல், “உன் ஆயுதங்கள் அழகாகத்தான் இருக்கின்றன. ஆனால், என் மன்னன் அதியமானின் ஆயுதங்கள், பகைவர்களைக் குத்திக் குத்திக் கூர் மழுங்கியும், உடைந்தும் கொல்லனின் பட்டறையில் பழுது பார்க்கப்பட்டுக் கிடக்கின்றன” என்று கூறினார். இதன் மூலம், அதியமான் போர்க்களத்தில் பல வெற்றிகளைக் கண்ட வீரன் என்பதையும், தொண்டைமான் போர்க்களத்தையே காணாதவன் என்பதையும் நயமாக உணர்த்தி, மீண்டும் ஒரு போரைத் தடுத்தார்.
தந்தையின் பேரன்பும், புலவரின் உரிமையும்
அதியமானுக்கும் ஔவையாருக்கும் இடையே இருந்தது வெறும் மன்னர்-புலவர் உறவு மட்டுமல்ல; அது ஒரு தந்தை-மகள் உறவுக்கு நிகரானது. ஒரு குழந்தை மழலைச் சொற்களில் பேசுவதைக் கேட்டுத் தந்தை மகிழ்வதைப் போல, அதியமான் ஔவையின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தான் என்பதை ஔவையார் பின்வரும் அடிகளில் குறிப்பிடுகிறார்.
“யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை” – புறநானூறு 92
தன் பாடல்கள் யாழிசையோடு பொருந்தாததாக இருக்கலாம், இலக்கணப் பிழைகள் இருக்கலாம்; ஆனால், ஒரு தந்தை தன் குழந்தையின் மழலைச் சொல்லை ரசிப்பது போல, நீ என் பாடல்களை அன்போடு கேட்கிறாய் என்று அவர் நெகிழ்கிறார்.
அதேபோல், அதியமான் பரிசு கொடுக்கக் கால தாமதம் செய்தபோது, தன் நெஞ்சிடமே கோபித்துக் கொள்ளும் ஔவையார், அதியமானின் கொடை உள்ளத்தை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. யானையின் துதிக்கையில் இருக்கும் கவளம், எப்படியும் அதன் வயிற்றுக்குச் சென்றுவிடும் என்பதைப் போல, அதியமானிடம் சென்றால் பரிசு நிச்சயம் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.
“…யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது; பொய்யா காதே…” – புறநானூறு 101
இவ்வாறு, சங்கப் புலவர் ஔவையாரின் பாடல்கள், வெறும் இலக்கிய நயத்திற்காக மட்டுமல்ல; அவை வீரம், ராஜதந்திரம், நட்பு, பாசம், கொடை எனப் பல வாழ்வியல் நெறிகளை நமக்குக் கற்றுத் தருகின்றன. அதியமானுக்கும் ஔவையாருக்குமான உறவு, சங்க காலத்தின் ஒரு தங்க அத்தியாயமாக இன்றும் மிளிர்கிறது.
![]()








No comments yet.