காசம் (அ) இருமல்
Cough and its symptom
ஆயுர்வேதத்தில் இருமலை காசம் என்று கூறுவர். சளி, இருமல் வந்து விட்டால் அதிலிருந்து மீள இயற்கையான வழிமுறைகளை ஆயுர்வேதம் கூறுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் காலநிலைகள் முற்றிலும் மாறிவிட்டது. வெயில் காலத்தில் மழையும், மழைக்காலத்தில் வெயிலும், மாறி மாறி கால நிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான காலநிலை மாற்றங்களால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அத்தகைய மாற்றங்களால் சாதாரணமாக வரக்கூடிய நோய் இருமல் ஆகும். மழைக்காலங்களில் அனைவருக்கும் இருமல் வருவது சகஜமான ஒன்றாகும்.

ஆயுர்வேதத்தில் இருமலை காசம் என்று கூறுவர். சளி, இருமல் வந்து விட்டால் அதிலிருந்து மீள இயற்கையான வழிமுறைகளை ஆயுர்வேதம் கூறுகிறது. அவ்வழிமுறைகளைப் பின்பற்றினால் பாதிப்பிலிருந்து மீண்டுவிடலாம்.
ஆயுர்வேதத்தில் காசம் (அ) இருமல் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
- வாதத்தினால் ஏற்படும் இருமல்
- பித்தத்தினால் ஏற்படும் இருமல்
- கபத்தினால் ஏற்படும் இருமல்
- க்ஷயத்தினால் (நெஞ்சுப்புண்) ஏற்படும் இருமல்
- க்ஷயத்தினால்(இளைப்பு) ஏற்படும் இருமல்
எல்லாவிதமான இருமலுக்கும் முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சிகிச்சை செய்யவில்லை என்றால் நோய் முற்றி க்ஷயரோகத்தை (இளைப்பு நோய்) உண்டாக்கிவிடும். இறுதியில் மரணத்திற்குக் கூட காரணமாக இந்நோய் அமைந்துவிடும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
இருமல் நோய் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள்
இருமல் நோய் ஏற்படுவதற்கு முன்பு தொண்டையில் கரகரப்பு, ருசியின்மை தொண்டையில் முள்குத்துவது போன்ற உணர்வு ஆகியவை ஏற்படும்.
இருமல் நோய் ஏற்படும் வீதம்
வாயுவானது கீழ் நோக்கிச் செல்வது தடைபட்டு மேல் நோக்கி மார்பு அறையை அடைகிறது. மார்பு, தொண்டை ஆகிய இடங்களில் பரவி சிரஸின் ஸ்ரோதஸ்களை நிரப்புகிறது. உறுப்புகளை குலுக்கி தூக்குவது போன்றும், கண்களை வெளிப்புறம் தள்ளுவது போன்றும் வேதனையுடன் முதுகு, மார்பு, விலா, ஆகிய இடங்களை பிடித்து உடைந்த வெண்கலத்தின் ஓசை போல வாயுவின் மூலமாக இருமலை உண்டாக்குகிறது. இருமல் ஏற்படக்கூடிய காரணங்களின் நிமித்தமாகவும் வேகமுள்ள வாயுவால் பலவாறான உராய்வு உண்டாக்கும். காசத்தின் வலியும், சப்தமும் வகைகளுக்கேற்ப மாறுபடுகின்றன. ஐந்து வகை இருமலை உண்டாக்குவதில் முக்கியமான காரணமாயினும், நிமித்த காரணங்களான பித்தம் முதலான தோஷங்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக வலியிலும் ஒலியிலும் காசத்தில் வேறுபாடு காணப்படுகிறது.
இருமலுக்கான காரணங்கள்
இருமலுக்கான காரணங்கள் அதன் மூல உற்பத்தி இடத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சுவாசப்பாதை சார்ந்த காரணங்கள்
1. மேற்பகுதி சுவாசப்பாதை நோய் தொற்றுகள்
இவ்வகை தொற்றுகள் மிகவும் வித்தியாசமானவை மற்றும் நீர்த்துளி நோய் தொற்றுகள் மூலமாகப் பிற நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு எளிதாகப் பரவக் கூடியதாகும். இதன் பொதுவான எடுத்துக்காட்டுகளாக ஜலதோஷம், சைனஸ் மற்றும் ப்ளுகாய்ச்சலை ஏற்படுத்துகின்ற இன்ஃபுளுயென்ஸா வைரஸ் நோய் தொற்று ஆகியவற்றைக் கூறலாம்.
2. கீழ்ப்பகுதி சுவாசப்பாதை நோய் தொற்றுகள்
இவ்வகைத் தொற்றுகள் மூச்சுப்பாதை மற்றும் அல்வியோலை என்று அழைக்கப்படும்.
நுரையீரல் திசுக்களைப் பாதிக்கின்றன. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிடில் இந்த நோய்த் தொற்றுகள் நுரையீலின் ஒரு மடல் பகுதியில் அழிவுக்குக் காரணமாகக் கூடும்.
இதயம் தொடர்பான காரணங்கள்
இதயத்தில் சேருகின்ற அதிகப்படியான இμத்தமானது நுரையீரல்களில் திரவங்கள் சேருவதற்கு வழிவகுக்கிறது. அதே போல இருமலையும் முக்கியமாக ஒருவர் இரவில் தூங்குகின்ற போது ஏற்படுத்துகிறது.
ஒவ்வாமை பிரச்சனைகள்
நச்சுத் தன்மை மிக்க வேதிப்பொருட்களின் புகையானது மற்றும் மூச்சில் உள்ளிழுப்பது, ஒவ்வாமை நாசி அழற்சி மற்றும் இருமலை ஏற்படுத்தக்கூடிய வகையில் மூக்கு மற்றும் சுவாசப்பாதை ஒவ்வாமை விளைவு ஏற்படக் காரணமாகக் கூடும். மகரந்தத் தூள், தூசு சுற்றுச்சூழல் மாசுகள் மற்றும் விலங்கு உண்ணிகள் போன்ற வழக்கமான சுற்றுச்சுழல் ஒவ்வாமைப் பொருட்களும் ஒவ்வாமை இருமலை தூண்டக் காரணமாகக்கூடும்.
வேறு சில காரணங்களான ஆஸ்துமா, நீடித்த நுரையீரல் அடைப்பு, நுரையீரல் ரத்த உறைவு, நுரையீரல் புற்று, நுரையீரல் செல் அழிவு மற்றும் சில செரிமான காரணங்களால் இருமல் ஏற்படுகிறது என ஆயுர்வேதம் கூறுகிறது.
வாதத்தினால் உண்டாகும் இருமல்
வாயுவை அதிகரிக்கச் செய்யும் காரணிகளால் கோபமடைந்த வாயுவானது மார்பு தொண்டை, வாய், உதடு ஆகியவற்றை உலரச் செய்யும். இருதயம், விலா மார்பு, தலை ஆகியவற்றில் வலி உண்டாக்கும். மயக்கம் குலுக்கல் குரல் கம்மல் ஆகியவற்றை உண்டாக்கும் மிகுந்த வேகம், வலி, சப்தம் ஆகியவற்றுடன் வறட்சியான இருமல் காணப்படும்.
பித்தத்தினால் உண்டாகும் இருமல்
பித்தக் காசத்தால் கண்களும், கபமும் மஞ்சளாகக் காணப்படும். வாய்க் கசப்பு ஜுரம், பிரம்மை, பித்தம், ரத்தம் கலந்து வாந்தியாதல், தாகம், குரல் மாற்றம் தொண்டை புகைச்சல், நெஞ்சுப் புளிப்பு ஆகியவையும் காணப்படும். இடைவிடாது இருமுவதால் கண்களில் நீர் ததும்பி நட்சத்திரம் போன்ற ஒளி பொருட்களைப் பார்ப்பது போல் இருக்கும்.
கபத்தினால் உண்டாகும் இருமல்
கப காசத்தால் மார்பில் சிறிது வலி காணப்படும். தலை ஸ்தம்பித்தும் பாரமாகவும் இருக்கும். தொண்டை ஆகியவற்றில் கபம் பூசியது போல் உணரப்படும். சோர்வு, பீனிசம் வாந்தி, ருசியின்மை, மயிர்க்கூச்சம் போன்ற அறிகுறிகளும் காணப்படும். கபம் தடித்தும் நைப்புடனும், வெண்மையாக வெளிவரும்.
நெஞ்சுப்புண்ணால் உண்டான இருமல்
சண்டை மற்றும் தன் பலத்திற்கு மீறிய செயல்களைச் செய்வதால் மார்பில் புண் ஏற்படுகிறது. அதனால் பித்தமும் வாதமும் மிகுந்து சீற்றமடைந்து காச ரோகத்தை உண்டாக்கும். ஆதனால் சளி ரத்தத்துடன் கலந்து மஞ்சள் கருமை ஆகிய நிறத்துடன் வெளிவரும். தொண்டையில் வலி, மார்பு பிளத்தல் போன்ற வலி கூர்மையான ஊசிகளால் குத்துவது போன்ற வலி மூட்டுக்களில் வலி, ஜுரம், சுவாசம், தாகம், குரல் மாற்றம், நடுக்கம், புறா முனகல் போன்ற சுவாச சப்தம், விலாப்புறங்களில் வலி, வீரியம் ருசி, அக்னி பவம், உடல் பவம், நிறம் இவையாவும் படிப்படியாகக்குறையும். சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளிப்படும். முதுகு புட்டம் ஆகிய இடங்களில் பிடிப்பு உண்டாகும்.
க்ஷயத்தினால் உண்டாகும் இருமல்
க்ஷய நோய் (இளைப்பு நோய்) உள்ளவருக்கு வாயுவை முக்கியமாக உடைய தாதுக்கள் நோய் காரணங்களால் கேடடைந்து இருமலை உண்டாக்குகின்றன. அதனால் தூர்நாற்றமுடைய சிவப்பு, மஞ்சள், பச்சை, நிறமுடைய சளியை துப்புவர். விலாப் பக்கங்களில் கட்டு தளர்வது போன்றும், இருதயம் நழுவுவது போன்றும் இருக்கும். பலக்குறைவு காணப்படும். முகம் பளப்பளப்பாகவும் தெளிவாகவும் காணப்படும். பற்களும் கண்களும் பளப்பளப்பாகக் காணப்படும். இந்நோயுடன் சுவாசமூட்டு, வாந்தி, குரல் கம்மல் முதலியவைகளும் ஏற்படும்.
வீட்டு வைத்தியம்
1. நெய்யில் வறுத்த கிராம்பு (அ) தான்றிக்காய் இருமலுக்குப் பயனுள்ளதாகும்.
2. ஆடாதோடை இலைச் சாறுடன் நெய் சேர்த்து சாப்பிடும் போது இருமலுக்குப் பயனுள்ளதாகும்.

ஆயுர்வேதத்தில் கூறும் மருந்துகள்:
“1. சிதோபலாதி சூரணம்
13 கிராம் அளவு சூரணத்தை தேன் கலந்து ஒரு நாளைக்கு இμண்டு முறை உணவுக்கு முன் (அ) பின் சாப்பிடவேண்டும்.
2. கற்பூராதி சூரணம்
300மில்லி கிராம் முதல் 1கிராம் வரை சர்க்கரையுடன் சேர்த்து உணவுக்கு முன் (அ) பின் சாப்பிட வேண்டும்.
3. பிருஹத் பஞ்ச முலம் வாதம்
15-20 மிலி எடுத்து திப்பிலியுடன் சேர்த்து நாளைக்கு இரண்டு முறை சாப்பிடவேண்டும்.
4. கரவீராதி யோகம்
60-150 மில்லிகிராம் கல்கண்டுடன் தேன் கலந்து நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
5. லவங்காதி வடி
ஒரு மாத்திரை வாயில் போட்டு கடித்துச் சாப்பிட இருமலுக்கு நல்ல பலன் தரும்.
6. ஸ்வாசானந்த குடிகா
ஒரு மாத்திரை வீதம் சீரக கசாயத்துடன் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
7. ஏலாதி வடி
ஒரு மாத்திரை வீதம் நாளைக்கு 4 முதல் 6 தடவை கடித்துச் சாப்பிட வேண்டும்.
8. கோதந்தி பஸ்மம்
60-120 மில்லி கிராம் தேன் கலந்து நாளைக்கு இμண்டு முறை சாப்பிட வேண்டும்.”
“9. பிரவாள பஸ்மம்
60-120 மில்லி கிராம் தேன் கலந்து நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
10. பிப்பல்யாதி ரசாயனம்
36 கிராம் மருந்தை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உணவுக்கு முன் (அ) பின் இரண்டு முறை எடுக்க வேண்டும்.
11. வாசா அவலேஹம்
12-24 கிராம் நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு பின் எடுத்து கொள்ள வேண்டும்.
12. கண்டகாரி அவலேஹ்யம்
1-3 கிராம் மருந்தை உணவுக்கு முன் (அ) பின் நாளைக்கு இரண்டு முறை சாப்பிடவேண்டும்.
13. வாசாரிஸ்டம்
இம் மருந்தை 20 மிலி அளவு எடுத்து சம அளவு தண்ணீர் கலந்து உணவுக்குப் பின் இரண்டு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
14. தாளிசாதி சூரணம்
2-3 கிராம் சூரணத்தைத் தேன் கலந்து 46 தடவை நக்கி சாப்பிட வேண்டும்.
15. தாளிசபத்ராதி வடகம்
2-3 கிராம் மருந்தை வாயில் இட்டு மெதுவாக கடித்துச் சுவைத்து சாப்பிட வேண்டும்.
16. அகஸ்திய ரசாயனம்
5-10 கிராம் மருந்தைச் சாப்பிட பின்பு இரண்டு வேளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
17. தசமூலக் கடுத்ரய கஷாயம்
15-20 மில்லி கஷாயம் சிறிது வெதுவெதுப்பான நீருடன் காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.”
இது போன்ற இன்னும் பல மருந்துகள் இருமலைக் குணமாக்க ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய மருந்துகள் இருமலை மட்டுமல்ல மற்ற உடல் உபாதைகளையும் குணப்படுத்துகின்றன. அத்தகைய மருந்துகளை அனைவரும் உபயோகப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு அனைவரும் பெற வேண்டும்.
![]()









No comments yet.