மரணத்துக்குள் சுத்தம் (Death Cleaning)

Home/Articles/அறிந்துகொள்ளலாமே/மரணத்துக்குள் சுத்தம் (Death Cleaning)

தமிழில் இதை இறப்பிற்கு முன்பான சுத்தம் எனக் கொள்ளலாமா?

இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர், ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ ஜெனரல் ஆவார். இவருடைய கருத்து எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருப்பதால் டெத் கிளீனிங் (Death Cleaning) என்பது நாமெல்லாம் அறுபது வயதை அடைந்து விட்டால், சிறிது சிறிதாகவும், தொடர்ச்சியாகவும் ஒரு பண்பட்ட விதத்தில், நம்மைச் சுற்றி நாம் கடந்த 60 வருடங்களில் சேகரித்த உலகாயுதப் பொருட்கள், மனதில் உள்ள பல கெட்ட படிமங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து (வெளியேற்ற) ஆரம்பிக்க வேண்டும்.

heaven

முதலில் நாம் சேகரித்து வைத்துள்ள தேவையற்ற துணிகள், பொருட்கள், பல இடங்களில் நாம் வாங்கிய கலைப்பொருட்கள், ஞாபகார்த்தச் சின்னங்கள், அதாவது நாம் பணிபுரிந்த இடங்களில் நமக்குக் கொடுத்த பரிசுப் பொருட்கள், நாமே விரும்பி வாங்கிய பொருட்கள், நமக்குப் பரிசாக கிடைத்தப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், இன்னும் பிற விஷயங்கள் ஆகியவற்றை அவை உபயோகமானதா என ஆராய்ந்து, சிறிது சிறிதாக அவைகளை வெளியேற்ற வேண்டும்.

நாம், உண்மையில் வயதாகி விட்டால் இந்த உலகத்தில் நமக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும். நம்முடைய குடும்பத்தாருக்கு நம்மைக் கவனிக்க நேரம் இல்லை. ஏனெனில் அவர்களுக்குக் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள், அவர்களுடைய சொந்தக் குடும்பம் ஆகியவை உள்ளன.

நம்முடைய இறப்பிற்குப்பின் நாம் ஏன் மற்றவர்களுக்கு இந்த சுத்தம் செய்யும் வேலைகளை மிச்சம் வைக்க வேண்டும்?

நாம் நல்ல உடல் நிலையுடனும், மனநிலையுடனும் இருக்கும் பொழுதே, நம்மிடம் இருக்கும் பொருட்களை/ சொத்துகளை, நன்கு சிந்தித்து அதற்கு ஏற்ப பயனாளர்களை தேர்ந்தெடுத்து, அதனால் அவர்கள் பயனடைகிறார்களா என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு அதைக் கொடுத்து விட வேண்டும். அவர்கள் சொந்தங்கள் ஆக இருக்கலாம், மற்றவர்கள் ஆகவும் இருக்கலாம்.

நம்மிடம் இருக்கும் பொருட்களை எடுத்து பகிர்ந்தளிக்கும் பொழுது, தீர்க்கமாகவும் மனசஞ்சலம் இல்லாமலும், அதைச் செய்யவேண்டும்.

அப்படிப் பகிர்ந்தளிக்கும் பொழுது, மன அழுத்தத்திற்கு உள்ளாவதோ, உணர்வுப்பூர்வமாக மனசஞ்சலம் அடைவதோ, அதீத உணர்ச்சி அடைவதோ கூடாது. கொடுக்க நினைத்தால், கொடுத்துவிட வேண்டும். அதுவே மனமகிழ்ச்சியைத் தரும்.

இதை இப்பொழுதே ஒவ்வொரு வாரமும், சிறிது சிறிதாகச் செய்ய ஆரம்பியுங்கள். ஒவ்வொரு வருட முடிவிலும் ஏதாவது பெரிதாக செய்யுங்கள்.

புதிது புதிதாக தேவையற்ற பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள். உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக வாங்கிக் கொண்டே இருக்காதீர்கள்.

உங்களிடம் இருக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வையுங்கள். ஆனால் அதற்கான உயிலை எழுதி வையுங்கள்.

ஆனால் உங்களுடைய கடந்த கால நினைவுகளைப் போற்றிப் பாதுகாத்து வையுங்கள். அது உங்களுடன் கடைசி காலம் வரை, பல காலகட்டங்களில் பயணம் செய்யும்.

நாம் நம்முடைய கடந்த 60 வருட வாழ்நாளில் யாரையேனும் தெரிந்தோ தெரியாமலோ துன்புறுத்தி இருந்தாலோ, அதாவது மனதளவிலோ அல்லது உடலளவிலோ அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.

நமக்கு உதவி செய்பவர்கள்/செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம்.

நாம் யாரின் மேலும் காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தால், அவற்றை சுத்தம் செய்து துடைத்தெறிந்து விட்டு, நம்முடைய மனதைத் தூய்மையாக வைத்திருந்தால், எந்த துர் கர்மாக்களும் இல்லாமல் இறப்பை எதிர் நோக்குவோம்.

நல்ல மனதையும் நல்ல எண்ணங்களையும் மட்டுமே நாம் கொண்டு செல்வோம். அது நம்முடைய மரபணுவில் ஒரு நல்ல அழிக்க இயலா அச்சை உருவாக்கும்.

இது ஒரு நல்ல கருத்தாக்கம். நினைவில் கொள்ளுங்கள்… குறைந்த பாரம்… திருப்தியான பயணம். .

Loading

No comments yet.

Leave a comment