மழைக் காலத்தில் பத்தியக் கஞ்சி

Home/Articles/நோய்களும் தீர்வுகளும்/மழைக் காலத்தில் பத்தியக் கஞ்சி

மழைக் காலத்தில் பத்தியக் கஞ்சி
(Pathiya kanji during rainy season)

ஆயுர்வேதத்தில் சிகிச்சை இரண்டு பிரிவாகப் பிரித்து வைத்துள்ளனர்.ஒன்று மனிதனின் ஆரோக்கிய நிலையைப் பாதுகாத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவது; மற்றொன்று நோய் பிடித்தவர்களை நோய்களின் பிடியிலிருந்து மீட்டு எடுப்பது.பத்தியக் கஞ்சி இந்த இரண்டு நிலைகளிலும் மிகுந்த பயன் அளிக்கிறது. அதாவது ஆரோக்கியமான மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியைக்கூட்டி நோய் வராமல் பாதுகாப்பதிலும், நோய் தாக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த பத்திய மருந்தாகவும் இந்த பத்தியக்கஞ்சி விளங்குகிறது.

மழைக்காலங்களில் வளர்சிதைமாற்றுத் திறன் குறைவதால் வயிற்று உபாதைகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பருவ காலத்தில் உருவாகும் வளிமண்டல நீர் நமது ஜீரண அமைப்பையும், நோய் எதிர்ப்புச்சக்தியையும் பலவீனப்படுத்துகிறது. இதனால் ஜீரண சக்தி குறைந்து, உடலில் நச்சுகள் சேர்ந்து விடுகின்றன. நச்சுகளின் காரணமாக மனிதனின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு,பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணமாக அமைந்து விடுகிறது. ஆகவே இந்தக் காலகட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

இம்மழைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆயுர்வேத சிகிச்சை உடலையும், மனதையும் பலப்படுத்தி ஆரோக்கியமானவராக மாற்றுகிறது. தவறான உணவுப் பழக்கங்கள் மேற்கொள்வதால் பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

பத்தியக் கஞ்சி ஆயுர்வேத சிகிச்சைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பத்தியக் கஞ்சியில் மூலிகைகளும், தானியங்களும் கலந்திருப்பதால் ஆற்றல் மிகுந்ததாகவும், காய்ச்சலை குணப்படுத்துவதாகவும் இருக்கிறது. மழைக்காலத்தில் ஏற்படும் வாதக்கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. உடலை சுத்தப்படுத்தி நல்ல செரிமானத்திற்கு இக்கஞ்சி உதவுகிறது. இக்கஞ்சி நச்சுகளை நீக்கி நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதில் மிக்க பலன் உள்ளதாக விளங்குகிறது.

பத்தியக் கஞ்சி செய்யும் முறை

தேவையான பொருட்கள்

நவரை அரிசி. சுக்கு. வெந்தயம்.நெய். சந்திர சூர விதை, தண்ணீர், பச்சைப் பயிறு, இந்துப்பு, சின்னவெங்காயம், தேங்காய்ப் பால், பூண்டு, ஓமம், சீரகம்.

பச்சை மருந்து சூரணம் கசாயத்திற்கு

மூக்கிரட்டை, தூதுவளை வேர், நிலப்பூசணிக்கிழங்கு, ஆமணக்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, ஓரிலை, மூவிலை, நெருஞ்சில், குறிஞ்சி, குறுந்தொட்டி, நீர்முள்ளி, இலுப்பை,குமிழ், கருவேர், பதிமுகம், தாமரைவளையம், சிறு ஈச்சம், வெட்டிவேர் ,அதிமதுரம், நிலப்பனைக் கிழங்கு.

பொடி மருந்து சூரணம்

சீரகம், ஏலக்காய், ஜாதிக்காய், கார்போக அரிசி, ஜாதிப்பத்திரி, சுக்கு, பெருஞ்சீரகம், அமுக்கரம், வாலுலுவை, வசம்பு, அரிசி, மிளகு,கிராம்பு.

செய்முறை

கசாயச் சூரணம் தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும். இந்தக் கசாயத்தில் நவரை அரிசியும், வெந்தயம், சந்திரசூர விதையும் கலந்து வேக வைக்கவும். பின் பொடி மருந்து சூரணம் தேங்காய்ப்பாலில் கலந்து கஞ்சியில் சேர்த்து ஒருகொதி வந்ததும் இறக்கவும்.

உட்கொள்ளும் முறை

காலையில் வெறும் வயிற்றிலும் அல்லது இரவு உணவாகவும் இப்பத்தியக் கஞ்சியை உட்கொள்ளலாம். ஜீரண சக்திக்கேற்ப 100 முதல் 200 மில்லி வரை எடுத்துக் கொள்ளவும்.

காலம், தேசம் இவற்றிற்கு ஏற்பகஞ்சியின் மூலப்பொருட்களை வடிவமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக அந்தந்த இடங்களில்கிடைக்கக்கூடிய மூலிகைகளைத்தேர்வு செய்து இக்கஞ்சியைத் தயாரிப்பதன் மூலம் இயற்கைச் சூழலில் உயிர் பன்முகத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.

கஞ்சியின் மூலப்பொருட்கள் பெரும்பாலும் ஜீரண சக்தி அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவல்லதாக உள்ளது. ஆகவே இப்படிப்பட்ட மழைக்காலங்களில் கஞ்சியை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழலாம் என ஆயுர்வேதம் வழிகாட்டுகிறது.

வாத நோய் குறுந்தொட்டிக் கஞ்சி

குறுந்தொட்டி  100 கிராம்

நவரை அரிசி  50 கிராம்

சீரகம் வெந்தயம், பூண்டு ஒவ்வொன்றும்  10 கிராம்

சுக்கு இந்து உப்பு  தேவையான அளவு

மேற்குறிப்பிட்ட பொருட்கள் தண்ணீரில் வேக வைத்து கஞ்சியாகக் குடித்து வர, வாத நோய் தீரும். இதை ஏழு நாட்களுக்கு மாலை அருந்திவர மிகவும் நல்லது.

ஓஜஸ் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

அமுக்கரா, மிளகு, சுக்கு, திப்பிலி, ஏலக்காய், மஞ்சள், வெந்தயம், சதகுப்பை, சீரகம், பெருஞ்சீரகம், மல்லி, கடுகு, ஓமம், பூண்டு, நன்னாரி இவையெல்லாம் 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். இதைக் காய வைத்துப்பொடித்து எட்டுப் பாகமாகப் பிரித்து வைத்துக் கொள்ளவும். 50 கிராம் நவரை அரிசியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு பாகம் பொடியைச் சேர்த்து கொதிக்க வைத்து 10 மில்லிகிராம் தேங்காய் பால் கலந்து வேகவைக்கவும். பின்பு இந்துப்பு அல்லது நெய் அல்லது வெல்லம் கலந்து, ஒருசிட்டிகை சாதிப்பத்திரி சேர்த்து இறக்கிவைக்கவும்.

இதை 18 நாட்களுக்கு அருந்தி வர, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், உடலின் தாதுக்களின் சக்தியைபலப்படுத்தவும், மலட்டுத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோய்

சிறுபீளை, பூவாங்குருந்தல், கீழாநெல்லி, செறுபடை, தழுதாழை, மூக்கிரட்டை, முயல் செவி, துளசி இலை, தகரை, பிரண்டை, முக்குற்றி,முடக்கறுத்தான், தொட்டாசிணுங்கி, நாவல் இலை, நாயுருவி (14 இலைகள்).இம்மருத்துவக் குணமுடைய இலைகளில் சாறு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 50 கிராம் நவரை அரிசி சேர்த்து கஞ்சி வைக்கவேண்டும். இந்து உப்பு, சுக்குசேர்த்து இறக்கவும்.

இது 7 அல்லது 14 நாட்கள் பருகி வந்தால் சர்க்கரை நோய், இருதயநோய், வாத நோய், வயிற்று உபாதைகள் தீரும்.

தோல் நோய்கள்

வெட்டிவேர், சந்தனம், சிறு திப்பிலி,காட்டுத் திப்பிலி, நெருஞ்சில்,சுண்டைக்காய் வேர், சுக்கு, ஓரிலைவேர், மூவிலை வேர், பார்லி காரம்,கோரைக்கிழங்கு, இறுவேலி,இந்துப்பு, வாய்விடங்கம், பொன்னிஅரிசி, கார்போக அரிசி, மிளகு, குடசபாலை, மல்லி, ஏலக்காய், சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் 10 கிராம் வீதம் காயவைத்துப் பொடிக்கவும். 50 கிராம் நவரை அரிசியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 250 மில்லிகிராமாக குறைக்கவும். பின் 50 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து இறக்கவும். இந்தக் கஞ்சி இரத்தம் சுத்தம் செய்வதற்கும், தோல் நோய்களுக்கும் நன்கு பலம் அளிக்கும்.

எலும்பு தேய்மானம்

நிலப் பூசணிக்கிழங்கு, குறுந்தொட்டி, குறிஞ்சி, தேவதாரம், பிரண்டை, 50 கிராம் வீதம் எடுத்து சாறு எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஒரு லிட்டராக குறைக்கவும். அதில் 50 கிராம் நவரை அரிசி சேர்த்து வேகவைத்து, அரைலிட்டராகக் குறைத்து, பதினைந்து கிராம் எள், கோதுமை சேர்த்து வேகவைக்க வேண்டும். இந்துப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து இறக்க வேண்டும். இதை 14 நாட்களுக்குப் பருகிவர, எலும்பு தேய்மானம், மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும்.

ஆரோக்கியமான வாழ்வு வாழ, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் அவசியம். இப்பத்தியக்கஞ்சி ஆரோக்கியமான உணவாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. மழைக் காலங்களில் இப்பத்தியக் கஞ்சியைப் பயன்படுத்தி, நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழவும்.

முறையான ஆகாரம் நிறைவான ஆரோக்கியம்.

Loading

No comments yet.

Leave a comment