எந்த ஒரு நாடாக இருந்தாலும், அதன் மக்கள் தொகையை நிலையாகப் பராமரிக்க, குழந்தை பிறப்பு விகிதமானது 2:1 ஆக இருக்க வேண்டும் என்பது மக்கள் தொகையியல் கோட்பாடு. ஆனால், நம் நாட்டில், குறிப்பாகத் தென் மாநிலங்களில், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 1.5 ஆகவும், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் 1.6 ஆகவும் உள்ளது. இந்தக் குறைவுக்கு மருத்துவ ரீதியான குழந்தைப்பேறு இல்லாமையைத் தாண்டி, சமூக மற்றும் உளவியல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘குழந்தையே வேண்டாம்’ அல்லது ‘இப்போதைக்கு வேண்டாம்’ என்று தள்ளிப்போடும் மனப்பான்மை அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணமாக ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சமூக மாற்றத்தின் மையப்புள்ளியாக இருப்பது, நமது பாரம்பரியத்தின் ஆணிவேராக விளங்கிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் குறித்த கண்ணோட்டம் மாறி வருவதே ஆகும்.
நவீன கலாச்சாரத்தின் தாக்கம்: ‘DINK’ மனநிலை
1980 முதல் 1990-களின் நடுப்பகுதி வரை பிறந்த ‘மில்லினியல்’ தலைமுறையினரிடமும், 1997 முதல் 2012 வரை பிறந்த ‘ஜென் Z’ தலைமுறையினரிடமும் குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்குப் பின்னால் இருப்பது, 1980-90களில் மேலை நாடுகளில் பிரபலமாக இருந்த ‘DINK’ (Double Income, No Kids) எனப்படும் கலாச்சாரத்தின் தாக்கமே. “குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்க வேண்டும், ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்” என்ற இந்தக் கண்ணோட்டம், தற்போது இந்தியாவிலும் மெல்ல மெல்லப் பரவி வருகிறது.
அத்தியாவசிய செலவுகள், வரிகள் போக, கையில் நிற்கும் வருமானம் (Disposable Income) கணிசமாக இருந்தால், வாழ்க்கையில் நாம் விரும்பும் சந்தோஷங்களை அனுபவிக்கலாம் என்ற மனநிலை இளம் தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாகவே, குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவதும் அல்லது வேண்டாமென முடிவு செய்வதும் நிகழ்கிறது. திருமணம் என்பது வெறுமனே இருவர் இணைந்து வாழ்வது மட்டுமல்ல; அது ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் சமூகக் கடமையும் கூட. ஆனால், இந்த அடிப்படைப் புரிதல் சிதைந்து, திருமணம் என்பது தனிப்பட்ட இன்பங்களுக்காக மட்டுமே என்ற கண்ணோட்டம் மேலோங்கும்போது, குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகிறது.
குடும்ப அமைப்பு: ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அரண்
திருமணம் என்ற பந்தம், பெற்றோர் மற்றும் குழந்தைகள் இணைந்து வாழ்வதே குடும்பம் என்று காலம் காலமாக நாம் பின்பற்றி வந்த ஒரு பாரம்பரியமாகும். இந்தப் பாரம்பரியத்தில் கீறல் விழத் தொடங்கியிருப்பதன் அறிகுறியே, ‘DINK’ கலாச்சாரத்திற்கு நம்மவர்களிடம் அதிகரித்து வரும் வரவேற்பு. பிறந்ததே சந்தோஷமாக வாழ்வதற்காகத்தான்; அதற்காக நிறைய சம்பாதிக்க வேண்டும்; சம்பாதித்ததை விருப்பப்படி செலவழித்து மகிழ வேண்டும் என்ற எண்ணம், ஒரு தனி மனிதனை அவனுடைய சமூகக் கடமைகளிலிருந்து வெளியே இழுத்துச் செல்கிறது. இது, மேலோட்டமாகப் பார்க்கும்போது தனிநபர் சுதந்திரம் போலத் தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் சமூகத்தின் கட்டமைப்பையே சிதைக்கும் ஆற்றல் கொண்டது.
உலக நாடுகளுக்கும் நமக்குமான தனித்துவமான வித்தியாசங்களில் முக்கியமானது, நம்முடைய குடும்ப அமைப்புமுறை. வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் காட்டிலும், நம் நாட்டில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கும், இங்கு நிலவும் பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கும் இந்தக் குடும்ப அமைப்பு ஒரு முக்கியக் காரணமாகும். இந்தப் பிணைப்புதான், தனிமனித ஒழுக்கத்தையும், சமூகப் பொறுப்புணர்வையும் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் விதைக்கிறது.
தனிமையின் கொடுமை: முதுமையின் வெறுமை
இப்படிப்பட்ட ஒரு வலுவான குடும்ப அமைப்பை உதறித் தள்ளிவிட்டு, எந்தக் கடமையும், பொறுப்பும் இல்லாத ஒரு வாழ்க்கை முறை, ஆரம்பத்தில் வேண்டுமானால் இனிமையாகவும், சுகமாகவும் இருக்கலாம். ஆனால், முதுமை நெருங்கும்போது, அந்த வாழ்க்கை வெறுமையாகிவிடும். அந்த வெறுமை தரும் கொடுமையை இளம் தலைமுறையினருக்குப் புரிய வைக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தின் கடமையாகும். அந்தப் பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கிறது.
குழந்தைப் பேறு என்பது வெறும் வாரிசை உருவாக்குவது மட்டுமல்ல; அது மனித உறவுகளின் பிணைப்பை, தலைமுறைகளின் தொடர்ச்சியை, மற்றும் சமூகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஒரு புனிதமான செயல். இன்றைய அரசு, இந்த உண்மையின் ஆழத்தை உணர்ந்து, குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில், வலுவான குடும்பங்களே வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே ஒரு வலுவான தேசத்திற்கு அடித்தளமிடும். எனவே, குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, நமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
![]()








No comments yet.