இன்றைய நவீன உலகம், தொழில்நுட்ப வளர்ச்சியிலும், பொருள்சார் முன்னேற்றத்திலும் உச்சம் தொட்டிருந்தாலும், அமைதி, சமாதானம், ஒழுக்கம் மற்றும் மனிதம் ஆகியவற்றில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றது அபூர்வமான, சந்தோஷம் நிறைந்த, நிம்மதியான, மகிழ்ச்சியான ஒரு பூமி. ஆனால், அந்த உலகத்தை நம்முடைய தீராத ஆசைகள், கட்டுக்கடங்காத கோபம், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய குணங்களால் பாழ்படுத்திவிட்டோம். மனிதனுக்குள் உருவான மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூவகை பேராசைகளும், அவற்றை நிறைவேற்றிக்கொள்ள அவன் நாடிய ஆட்சி அதிகாரமும், பண பலமும் நம்மை நாமே சீரழிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டன. இந்த நிலையில், அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதியின் வழியாக உலக நன்மைக்காக இறைவனை வேண்டுவோம்.
இந்தத் தவறுகளை நாம் நமக்காக மட்டும் சரி செய்துகொள்ள முடியாது, ஏனெனில் நமது காலம் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது நாம் வாழும் இந்த நொடியிலேயே, இந்த உலகை மீண்டும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றி, அமைதியான ஒரு சமூகத்தை நமக்குப் பின்வரும் சந்ததியினருக்கு வழங்கிச் செல்ல வேண்டியது நமது தலையாய கடமையாகும். இந்த மாபெரும் செயலைச் செய்ய, நாம் அனைவரும் அன்னை பராசக்தியை, அந்த இறைவனை வேண்டுவோம். நாயன்மார்கள் பாடியது போல “அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!” என்று அந்த உலகநாயகியை வணங்குவோம். நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், ஒரு தாய் தன் பிள்ளையை அரவணைத்து, அன்பு காட்டி நல்வழிப்படுத்துவாள். அந்த உலக நாயகியான அபிராமி அம்பிகையை வணங்கி, இந்த உலகிற்குத் தேவையான வரங்களைக் கேட்போம்.
அபிராமி அந்தாதி காட்டும் வழி
அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியின் 69-வது பாடல், ஒரு மனிதன் அன்னையை வேண்டினால் என்னென்ன நலன்கள் கிடைக்கும் என்பதை அழகாகப் பட்டியலிடுகிறது.
“தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.”
இந்தப் பாடலை வழிகாட்டியாகக் கொண்டு, இன்றைய உலகின் தேவைகளுக்காக அன்னையிடம் வேண்டுவோம்.
1. தனம் தரும் அன்னையே!
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” (குறள் 400) என்று வள்ளுவர் கல்வியையே சிறந்த செல்வம் என்றாலும், இன்றைய உலகில் பணமே பிரதானம் என்றாகிவிட்டது. பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற ஆணவத்தை அது உருவாக்கிவிட்டது. ஒருபுறம் செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாக, மறுபுறம் அன்றாட உணவுக்கே அல்லல்படும் ஏழைகள் இன்றும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு சமூகத்தில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. அபிராமி அம்மையே! இந்த மேடு பள்ளங்கள் சமன் செய்யப்பட்டு, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் உன்னத நிலை உருவாகிட, அனைவருக்கும் போதுமான செல்வத்தைத் தந்து அருள வேண்டும். அந்த செல்வம் பேராசையை வளர்க்காமல், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, மனநிறைவுடன் வாழ வழிவகுக்க வேண்டும்.
2. கல்வி தரும் பேரொளியே!
கல்வி போன்றதொரு சிறந்த செல்வம் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை. “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்” (குறள் 395) என்று வள்ளுவர் கல்லாதவரை இழிவாகக் கூறினாலும், இன்றைய சூழலில் எல்லோருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டுமல்லாமல், அது ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், நாகரிகத்தையும் கற்றுத் தருவதாக அமைய வேண்டும். அத்தகைய கல்வியை அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்க, இந்த ஆளும் அரசுக்கு அன்னை துணை நிற்க வேண்டும். அதன் மூலம் அறிவார்ந்த, பண்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
3. ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்
வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடாத, தளர்ச்சியடையாத மன உறுதியை அன்னை நமக்குத் தர வேண்டும். குறிப்பாக, இந்த உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்கள், பல நேரங்களில் தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் மனம் தளர்ந்து போகின்றனர். கம்பர் ஏரெழுபதில் கூறுவது போல, “உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே” என்ற உழவர்களின் பெருமையை நாம் உணர வேண்டும். அவர்களின் மனம் தளர்ந்துவிட்டால், இந்த உலகமே நின்றுவிடும். ஆகவே, அன்னை அபிராமி, அந்த உழவர் பெருமக்களின் மனதில் தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். உழைக்க மனமின்றி, ஊரார் உழைப்பில் உண்டு திளைக்கும் ஊதாரி மக்களின் மனதையும் மாற்றி, அவர்களையும் நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கச் செய்ய வேண்டும்.
4. தெய்வ வடிவும், நெஞ்சில் வஞ்சம் இல்லாத இனமும்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 50) என்கிறார் வள்ளுவர். இவ்வுலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்பவன், வானுலகில் உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவான். முதுமொழிக் காஞ்சியில் கூறப்பட்டுள்ள பத்து சிறந்த பண்புகளான ஓதலின் சிறந்தது ஒழுக்கம் உடைமை, காதலிற் சிறந்தது கண்ணஞ்சப் படுதல் போன்ற நற்பண்புகள் மக்களிடம் பெருகி, அவர்கள் தெய்வ நிலையை அடைய அன்னை அருள வேண்டும். மேலும், “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” (குறள் 34) என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, வஞ்சகம் இல்லாத நேர்மையான எண்ணம் கொண்ட மக்கள் மனதில் அன்னை குடிகொண்டு, இந்த உலகை நல்வழிப்படுத்த வேண்டும்.
5. நல்லன எல்லாம் தரும்
பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று மூத்தோர் வாழ்த்துவர். கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, குன்றாத வளமை என அந்த பதினாறு செல்வங்களையும் எம் மக்களுக்கு வழங்கிட வேண்டும். உன்னை வணங்கும் அன்பர்களுக்கு, நீ நல்லன எல்லாம் தந்தருள வேண்டும். அபிராமி பதிகத்தில் வேண்டுவது போல, “துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்” என்று உன்னுடைய அன்பர்களுடன் கூடி வாழும் இனிய வாழ்க்கையை எங்களுக்கு அருள வேண்டும்.
அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய அன்னையே, உனது கருணைக் கண்களால் இந்த பூவுலகைப் பாரம்மா. அறிவியல் வளர்ச்சி என்ற மாயையில் சிக்கி, இயற்கை வளங்களை அழித்துவிட்ட எங்களை மன்னித்து, உன் கருணையால் இந்த உலகம் மீண்டும் தழைத்து வளர்ந்திட அருள் செய்ய வேண்டும். நேற்றைய உலகத்தை நாங்கள் மீட்டு, நாளைய தலைமுறைக்கு நல்லதொரு உலகமாக வழங்கிட, எங்களுக்குத் துணை புரிவாய் அகிலாண்ட நாயகியே!
வணக்கத்துடன்!
அன்போடு
டாக்டர் கி.முத்தையன்
![]()








No comments yet.