வாழ்க்கைப் பாதை (life path)

Home/Articles/ஆன்மிகம் ஒரு அறிவியல்/வாழ்க்கைப் பாதை (life path)

வாழ்க்கைப் பாதை (life path)

இதற்கு முன் தொடரில் உன்னுள் உன்னைத் தேடு என்ற சுய அடையாளத்தைப் பற்றிய தொடரைப் பார்த்தோம். மற்றும் நாம் நம்முடைய சுய அடையாளத்தைத் தேடுவதற்கு உண்டான கருவிகளாக நம் உடலில் உள்ள எந்திரங்களின் செயல்பாட்டையும் அவற்றின் அடையாளமும் நம் சுய அடையாளமான “நான்” என்ற விஷயம்எவ்வாறு நம்மை ஆட்கொள்கிறதுஎன்பதைப் பற்றியும் உன்னுள் உன்னைத் தேடு என்ற தொடரில்பார்த்து அறிந்தோம். அடுத்ததாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதாக இருக்கிறது அதைப் பற்றிப் பார்ப்போம்.

ஜனனம், மரணம் இதன் இடையில் உள்ள காலமே வாழ்க்கை. வாழ்க்கை என்பது வாழும் நாட்களையும் வாழும் முறையையும் சார்ந்தது. ஒரு ஜீவன் பிறந்ததில் இருந்து மரணம் வரைபயணிக்கும் தூரம்தான் அதனுடைய வாழ்நாள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது ஏற்படும் அனுபவங்களே வாழ்க்கையின் நாட்கள் ஆக மாறுகிறது.

சிறிய எறும்பு முதல் பெரிய யானைவரை மனிதன் என அனைவருக்கும் பிறந்தநாளில் இருந்து மரணகாலம் வரை ஏற்படும் சிறு சிறு அனுபவங்களும் அவனுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை வரலாறாக மாற்றி அதில் சில வரலாறுகள் சரித்திரம் ஆகிறது; சில வரலாறுகள் வாழ்க்கையாகிறது; சில வரலாறுகள் அனுபவமாகிறது. இவ்வாறு நாம்சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இங்கே மனிதன் பிறந்த நாளிலிருந்து மரணத்திற்கான இடையில் பயணிக்கும் பாதை அதில் காணும் அனுபவம் இந்தப் பாதையின் நோக்கம் இவை எல்லாவற்றையும் இந்த வாழ்க்கைப்பாதையில் காணலாம்.

வாழ்க்கையின் அர்த்தம்.

வந்தவர் கோடி, சென்றவர் கோடி,

நிலையாய் நிற்பவன் யாரடா?

என்று பெரியவர்கள் சொன்னது போல் இந்த உலகில் தினமும் பிறப்பு என்ற விஷயமும் இறப்பு என்ற விஷயமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிறப்பவர் இறப்பதும் புதியதாகப் பிறப்பதும் ஒரு சுழற்சியே, வந்தவர் அப்படியே இருந்துவிட்டால் இறப்பவன் இல்லை இல்லையா.? சரி மனிதன் மட்டும் தான் பிறந்து மடிகிரானா? இந்தப் பூமியில் பிறந்த எல்லா உயிரினங்களும் இதில் உட்பட்டுத் தான் செயல்படுகிறது. இந்த உலகில் நிலையாய் இருந்து விடுவது எதுவும் இல்லை, சிலசமயம் இந்த உலகில் உயிர் அற்ற சில பொருட்களும் அதாவது சிகரங்களும், நீர்நிலைகள், கல் குன்று,என நிலை நில அமைப்புகளும் தன்னுடைய மாற்றத்தை மாற்றிக்கொண்டுதான் உள்ளது. நிலையாக இந்த உலகில் எதுவும் இருப்பது இல்லை. இந்த நிலை மாற்றமே இந்த உலகைப் புதுமையாகவும் வேறு வேறு நிலைக்கும் எடுத்துச் செல்கிறது.

கல்குன்றங்களும், சிகரங்களும், நீர்நிலைகளும், நில அமைப்புகளும், ஏதேனும் புவியியல் மாற்றத்தில் தன்னுடைய உருவங்களையும் நிலைத்தன்மைகளையும் மாற்றிக் கொள்கிறது. சில கற்பாறைகள் தன்னுடைய உருவத்தையே மாற்றி சிலைகளாகவும் கோவில்களாகவும் மாற்றப்பட்டு வழிபாட்டுத்தலமாக உருவெடுக்கிறது. சில கல் குன்றுகள் சிறப்புமிக்க கோவில்களாகவும் வரலாறு போற்றத்தக்க சிறந்த இடமாகவும் இந்த பூமியில் பலநூறு வருடங்கள் கடந்து பிரமிப்பை உருவாக்குகிறது. உதாரணமாக “எல்லோரா”.

சில நீர் நிலைகள் தான் நிலைத்தன்மைகளை மாற்றி வேறு வேறுதன்மையுள்ள நிலங்களில் சென்று அங்கு பசுமையான வயல் வெளிகளாகவும் சிறப்புமிகு விவசாய இடமாகவும் உருவாக்குகிறது. நீர்நிலை இல்லாத இடங்கள் பாலைவனங்களாகவும் உயிரினங்கள் வாழத் தகுதி இல்லாத இடங்களாகவும் பரந்த மணல் பகுதிகளாகவும் உருவாகிறது. கல் குவியல்கள்மண் திட்டுக்கள் என உருமாற்றம் அடைந்து சில உயிர் ஜீவன்களுக்கு வசிப்பிடமாகவும் மாறுகிறது.

இவை அனைத்தும் இயற்கை தன்னுடைய உருவத்தில் இருந்து அடுத்த அடுத்த உருவங்களைக் மாற்றிக் கொண்டு பூமி தன் வாழ்க்கைப்பாதையைத் தொடர்கிறது.

இவை அனைத்திற்கும் உயிர் இல்லை ஆனால் தன்னுடைய உருமாற்றத்தைத் தொடர்ந்து பல்லாயிரம் கோடி வருடங்களாக செய்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பூமியில் வாழ்ந்த எத்தனையோ உயிரினங்கள் தற்போது இல்லை. அவை வாழ்ந்ததற்கு உண்டான ஆதாரங்கள் முற்றிலும் அழிந்து போய் வேறு ஒரு உயிரினம் புதுமையாக இந்தப் பூமியில் வாழ்கிறது. இவ்வாறு உயிரினங்கள் புதிதுமாக புதிய புவியியல் தன்மைக்கேற்றவாறு தன்னுடைய உடல் அமைப்பு வாழ்க்கை முறைவாழ்வியல் முறை முதலியவற்றை அந்தக் காலச் சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றி வாழ முற்படுகிறது. அவ்வாறு வாழ முற்படும்போது அது சந்திக்கும் இடர்ப்பாடுகள் சிரமங்கள் வாழ்க்கையில் அதற்கான ஒரு அனுபவத்தையும் சவாலையும்கொடுக்கிறது.

எந்த ஒரு விஷயமும் எளிமையாகக் கிடைத்து விடுவது இல்லை இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றச் சூழல் அழகாக இருந்தாலும் தன் தேவைக்கான போராட்டத்தை தினம் தினம் நடத்திட வேண்டும் அந்தப் போராட்டத்தில் தோற்றுவிட்டால் உயிரை இழக்க நேரிடும் போராட்டத்தை வென்று விட்டால் மறுநாள் சூரிய உதயத்தைப் பார்க்கமுடியும் ஒவ்வொரு இரவும் பகலும்அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு போராட்ட சக்கரமாகவே அமைகிறது.

இந்தப் போராட்டம் எதற்காக? போராடினால் தான் வாழ முடியுமா?ஆம். இந்த உலகில் வாழ வேண்டும் என்றால் போராடித்தான் ஆக வேண்டும் ஒவ்வொரு நிமிடமும் உணவுக்காகவும் வாழ்விடத்திற்காகவும் தன் தேவைக்காகவும் போராட்டம் தொடரும்.

இந்தப் போராட்டம் மனிதனுக்கு மட்டும் அல்ல மரம், செடி, சிறு சிறு உயிரினங்கள், ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காடுகளில் வாழும் உயிரினங்கள், நிகர்நிலை உயிரினங்கள், என அனைத்தும் அதனதன் சூழலுக்கு ஏற்ற போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறது.

ஒரு உயிர் இனத்திற்கு உணவு மட்டுமே போதுமானது என்று இருந்து விடுவது இல்லை அதற்கான வாழ்விடத்தைத் தேர்வுசெய்கிறது, தனக்கான துணையையும் தேர்வு செய்கிறது, இந்த இரண்டும் எளிமையாகக் கிடைத்து விடாது அதுவும் போராட்டமே. வாழ்க்கைப் போராட்டம் அதன் உயிர் உள்ளவரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

உதாரணமாக, ஒரு மரத்தின் விதையை ஒரு பாறை மேல் ஒரு பறவை எச்சமாகப்போட்டு விடுகிறது. அந்த விதைதனக்கான நீர்த் தன்மையை எடுத்துக்கொண்டு அந்தப் பாறையின் துளைவழியாக உள்ளே செல்கிறது. பிறகு மெதுவாக முளைவிட்டு அந்தப்பாறையின் வெடிப்பு வழியாக வெளியே வருகிறது. இந்த மரத்திற்கான தண்ணீர் காற்றில் இருந்தும் மழை நீரில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. ஆனாலும் தன்னுடைய போராட்டத்தைத் தொடர்ந்ததால் அந்தப் பாறையை இரண்டாக உடைத்து தன்னுடைய வேரை பாதையில் பாய்ச்சுகிறது. பிறகு பாறை இருந்த இடத்தை மறைத்து தன்னுடைய வேரை உறுதி செய்து மரம் ஓங்கி நிற்கிறது. அந்தப் பாறை இருந்த இடத்தை மொத்தமாக வென்று இந்த மரம் தன்னுடைய விருத்தியை உருவாக்குகிறது. இது அனைத்தும் அந்த மரத்திற்கு எளிமையான விஷயமாக இருந்து விடுவது இல்லை கடினமான போராட்டமாகத் தான் அதன் வாழ்க்கை இருக்கிறது.

ஒரு மரம் அந்த இடத்தைவிட்டு நகராமல் பல வருட காலம் போராட்டம் செய்து அந்த இடத்தில் ஒரு பெரிய விருட்சமாக மாறுகிறது. என்றால் அதன் போராட்டம் சாதாரணமானது அல்ல. சரி! அவ்வாறு போராட்டம் செய்த அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மரம் அங்கேயே நிலைத்து விடுவது இல்லை, அதன் காலம் முடிந்த உடன் அதே இடத்தில் அது மண்ணோடு மண்ணாக கலந்து விடுகிறது. மண்ணோடு மண்ணாகக் கலக்க வேண்டிய மரம் ஏன் இவ்வளவு போராட்டங்கள் செய்தது என்று கேட்க ஒரு கேள்வி வரும்.

ஆம்! அந்த மரம் தனக்காக மட்டும் வாழ்வது இல்லைத் தன்னுடைய சந்ததியை இந்த உலகிற்குக் கொடுப்பது மட்டும் அந்த மரத்தின் வேலையாக இருப்பது இல்லை. அந்த மரத்திற்குத் தெரியாமல் அதன் பயன்பாடு பல உயிரினங்களைச் சார்ந்ததாக உள்ளது. இந்த மரத்தைச் சார்ந்து பல உயிரினங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறது. அவற்றிற்கு இந்த மரம் உணவாகவும் தங்கும் இடமாகவும் இருந்திருக்கிறது. இந்த மரம் இல்லாமல் இருந்திருந்தால், பல பறவைகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இந்தப் பறவை தங்குவதற்காக இந்தமரம் தன்னுடைய போராட்டத்தை நடத்தவில்லை, சில பூச்சி இனங்களும் வேறு சில உயிரினங்களும் வாழ்வதற்காக இந்த மரம் தன் வாழ்க்கையைப் போராட வளரவில்லை இந்த மரத்திற்கே தெரியாமல் ஏற்படும் நிகழ்வு தான் மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும்.

Loading

No comments yet.

Leave a comment