வணக்கத்துக்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
to Respected Muthuvel Karunanidhi Stalin mk Stalin
வணக்கத்துக்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்ட வேண்டுமானாலும் வசைபாட வேண்டுமானாலும் முதலில் பாராட்டப்பட வேண்டியவர் அல்லது வசைபாட வேண்டியவரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தொட்டே நான் உங்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் என்ற நிலையில் இந்த திறந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.
எப்போதுமே முதலில் சந்திக்கும் போது வணக்கம் சொல்லித்தான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் முதலில் மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வராகப் பணியாற்றிவரும் தங்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம்.
முதலில் ஒருவரைச் சந்திக்கும் போது நமக்குள் இரு எண்ணங்கள் தோன்றும். நேர்மறை எண்ணங்கள் (பாராட்டுகள்), எதிர்மறை எண்ணங்கள்(வசைபாடுதல்) என இருவகைக் கோணங்களில் அவரைச் சந்திப்போம். அப்படித்தான் இப்போதும் உங்களையும் சந்திக்கிறேன்.
அடிப்படையில் ஒரு விவசாயப் பட்டதாரி
யாயினும் வாழ்வியலில் ஒரு கல்வியாளராக என்னை வளர்த்துக் கொண்ட வகையில் கல்வியாளன் என்ற பார்வையில் தான் இந்தப்பாராட்டுகளும் வசைபாடுதலும் அமைகிறது.
முதலில் பாராட்டியே ஆகவேண்டும். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கல்வி பற்றிய கருத்தும்மாணவர்கள் பற்றிய பொறுப்புணர்ச்சியையும் கண்டு வியக்கிறேன். அவற்றைவரிசைப்படுத்தும் வகையில் உங்களைபாராட்டுகிறேன்.
விதையிலிருந்துதான் விருட்சம் உருவாகின்றன என்பது இயற்கையின்நியதி. தாவரங்கள், விலங்குகள்,பறவைகள் மட்டுமல்லாது இதுமனிதர்களுக்கும் பொருந்தும்.
அங்கன்வாடி

பச்சிளம் குழந்தைகள் திடகாத்திரமாக, ஆரோக்கியமாக, புத்திசாலித்தனமாக வளர வேண்டுமானால் பால் பருவத்திலிருந்தே ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம் இன்று வரை அவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறீர்கள். அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். என்றாலும் இத்திட்டத்தில் இன்னும் சற்று ஆழமாகக் கவனம் செலுத்தி குறைகளற்ற அங்கன்வாடிகளாக (பால் வாடிகளாக) அவை செயல்பட வேண்டும்.

பள்ளிக் குழந்தைகள் (மாணவர்கள்)கல்வியில் உள்ள ஆர்வத்தை அதிகரித்திடவும், இடைநிலை கற்றலைத்தவிர்க்கவும், காலை உணவு, மதிய உணவு, மாலை நொறுக்குத்தீனி எனவளர்த்துவிட்ட உங்களது உயரிய பண்புக்கும் ஒரு வணக்கம் கூறிடவேண்டும்.
கல்வியில் உயர்ந்திட வேண்டும், எல்லோருக்கும் கல்வி என்ற அடிப்படையில், சீருடை, விலையில்லாப்புத்தகம், நோட்டு, விலையில்லா இருசக்கர வாகனம், விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்துப் பயணம் என்ற அடுக்கடுக்கான அறிவிப்புகள் கண்டுவியந்து பாராட்டுகிறேன்.
அரசுப் பள்ளிகள்

அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி, அரசுபிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி, அரசு பழங்குடியினர் நலப்பள்ளி என்று பல்வேறு சாதி அடிப்படையில் வெவ்வேறு துறைகளில் இயங்கிவந்த அனைத்துப் பள்ளிகளும் இனிஅரசுப் பள்ளிகள் (அரசு ஆரம்பப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி,அரசு உயர்நிலைப்பள்ளி) எனக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இணைந்து இயங்கும் என தங்களது அரசின் அறிவிப்புகளுக்கு உங்களது சமதர்ம ஆட்சியின் கொள்கை கோட்பாடுகளை எப்படிப் பாராட்டுவது என்று மயங்கி நிற்கிறேன்.. இங்கு பாரதி பாடிய ஒரு கவிதை என்நினைவுக்கு வருகிறது.
கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான் நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
அகழி வெட்டினான்
சொல் விளக்கமென்ற தனிடைக்
கோயிலாக்கினான்
ஸ்வாதந் தரிய மென்றதன் மேற்
கொடியைத் தூக்கினான்
– பாரதி
திலகரை வாழ்த்திப் பாரதி பாடிய இந்த பாடல் வரிககள் உங்களுக்குப் பொருந்தும் என்பதாலே இங்கு பதிவிட்டு பாராட்டுகிறேன்.
உயர்கல்வி
உயர் கல்வி கற்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் எண்ணற்றச் சலுகைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழை நடுத்தர கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்துவிட்டது கண்டு மகிழ்ந்து பாராட்டுகிறேன்.
ஒன்றிய அரசு நடத்தும் பணியாளர் தேர்வுகளுக்கு விரும்பிக் கற்கும் மாணவர்களுக்கு நீங்கள் அறிவித்துள்ள ஊக்கத் தொகை எனது நெடுநாளைய கனவுகளுக்கு ஒரு விடியலாக அமைந்துவிட்டது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது பாரதியின் வாக்கு. இந்தத்தமிழ்நாட்டிலிருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ். போன்ற அகில இந்திய தேர்வுகளில் வெற்றிபெறும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கண்டு கண்ணீர் வடிக்கும் என் போன்றோர்க்கு உங்களது அறிவிப்பு ஒரு அமுதசுரபியாக இருக்கிறது என்பதால் உங்களைப் பாராட்டுகிறேன்.
நீட்
ஜனநாயக நாட்டில் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் இந்த நீட் விவகாரத்தில் நீங்கள் நிற்கின்ற உறுதிப்பாடு தமிழர்களை வியக்க வைக்கிறது. அதற்காகவும் பாராட்டுகிறேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது ஐயன் திருவள்ளுவர் கூறியிருக்கிறார்
வலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின்
மெலியார் மேல்செல்லும் மிடத்து. — ——குறள் 250
இந்தத் திருக்குறளுக்கான விளக்கம் தெரியும். தெரிந்திருந்தும் பதவி, பணம், அதிகாரம் என்ற ஆணவத்தால் ஒரு குறிப்பிட்ட கொள்கையை திணித்தே ஆகவேண்டும் என்ற அதிகாரப் போதை எப்போது இந்த அரசியல்வாதிகளிடமிருந்து விடைபெறுமோ அன்றுதான் நாடு விடுதலை அடைந்ததாகக் கருதப்படும். இருந்தும் விடாப்பிடியாகத் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்காகப் போராடும் உங்களுக்கு மேலும் ஒரு பாராட்டு.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் அறிவு, திறன் மேம்பாடு என்று அனைத்து வழிகளிலும் கல்வித் துறைபீடு நடைபோடுவதையும் பாராட்டியே ஆகவேண்டும். பாராட்டிக் கொண்டே போனால் உங்களுக்கு
உச்சிதனை முகந்தால் கர்வம்
ஓங்கி வளரு தடி!
மெச்சிவுனை யூரான் புகழ்ந்தால்
மேனி சிரிக்குதடி.
- பாரதி
உண்மைதான். அதேசமயம் உங்களது தலைமையின்கீழ் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடுகளை விளக்கிட முயலும்போது எப்படி எதிர்கொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் வள்ளுவர் கூறுகிறார்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். குறள் 448
ஆற்றில் நீர் ஓடிவருகிறது. அதைஅப்படியே ஓடவிட்டுவிட்டால் ஓடிப்போய்க் கடலில் சங்கமித்துவிடும். அதையேத் தடுத்து தடுப்பணைக்கட்டினால், வேளாண்மைக்கு, குடிநீருக்கு, மின் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? அதுபோன்ற தடுப்பணைதான் இந்த இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்பவன் என்று உணரலாம். அதன் அடிப்படையில்தான் இங்கும் சிலவிமர்சனங்கள் பதிவிடப்படுகின்றன.
எவையெல்லாம் ஆரம்பத்தில் பாராட்டிப் புகழப்பட்டதோ அவையே இங்கும் விமர்சனங்களாகப் பதிவிடப்படுகின்றன. ஏற்பது இகழ்ச்சியல்ல; ஏற்றுக் கொள்வதே சிறந்த தலைமை ஆகும் என்பது தான் வரலாறு கண்ட உண்மை. அந்த அடிப்படையில் இங்குபார்ப்போம்.
பள்ளி சென்று கல்வி பயில்வது எதற்காக? நன்கு படித்து சிறந்து விளங்கி மேம்பட்ட அறிவுடன், திறன்மேம்பாட்டுடன் ஒரு நல்ல பணியில் அமர்ந்து தன்னை உயர்த்திக் கொள்வதோடு, தன் குடும்பத்துக்குப்பாதுகாப்பு தருவதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் துணைநிற்பதற்குத் தானே இவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கிறோம். நாம் என்ன சங்ககால புலவர்கள் அல்லவே.
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்…
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்துத் தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக் கரமே.
மன்னவர் பொருள்களை கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்
மாமன்னன் கர்ணனோ
தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல் வைத்தவன்
கர்ண வீரன்
வறுமைக்கு வறுமையை
வைத்ததோர் மாமன்னன்
வாழ்கவே வாழ்க வாழ்க
கண்ணதாசன் (கர்ணன் படம்)
என்று புகழ்ந்து பாடி நாள் தோறும்சென்று பாடி யாசகம் பெறுவதற்காகவா தமிழ்ப் படித்தோம். யோசித்துப்பாருங்கள். நன்றாகப் படிக்கவேண்டும், நல்லறிவு பெறவேண்டும், மரியாதைக்குரிய ஒரு பணி வேண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும், உணவு, உடை, உறைவிடம், உற்றார், உறவினர், ஊர், உலகம் செழிக்க வேண்டும். அதற்கு நமது அறிவும்,திறமையும், மேலாண்மையும் பயன்பட வேண்டும் என்று தானே கல்வி பயில்கிறோம். ஆனால், இன்றையநிலை என்ன?
தமிழ்நாட்டில் ஒரு ஐம்பது வகையான படிப்புகள் அர சுப் பணிக்கு ஏற்புடைய, தகுதியுடைய, வரையறையுடைய படிப்புகள் அல்ல என்று உயர்கல்வித்துறை அறிவித்துவிட்டன. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இந்ததடை செய்யப்பட்ட படிப்புகள் எல்லாவற்றிலுமே கிராமப்புற ஏழை, வசதியில்லாத, capitation fee கட்டமுடியாத முதல் தலைமுறை இளைஞர்கள், வேறு வழியே இல்லாமல் ஏதாவது ஒரு பட்டப்படிப்புப் படித்தால் ஒரு நல்ல பணி கிடைக்குமே என்று தானே படிக்கிறார்கள்.
அது எப்படி யூ.சி.ஜி. அறிவித்த படிப்புகளை உயர்கல்வித்துறை தரமற்றது என்று அறிவிக்க முடியும்? இது நீயா நானா? என்ற ஈகோ பிரச்சினையால் பாவம் ஏழை மாணவர்களின் எதிர்காலம் தானே பாழாகிறது. நாளைய இந்தியா, இன்றைய இளைஞர்களின் கையில் இருக்கிறது என்ற அப்துல்கலாம் வார்த்தைகள் வீண்தானா? அல்லது நூறு இளைஞர்களைக் கொடுங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்ற சுவாமிவிவேகானந்தரின் வார்த்தைகளும் பொய்யா?
அடுத்து நீட் தேர்வு.இதில் ஒருவிநோதம் நிறைந்திருப்பதைக் காணவேண்டும். 80 சதவீம் கல்வியறிவு பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை, 40 சதவீதத்துக்கும் குறைவான வடமாநில மாணவர்கள் மட்டும் இதே நீட் தேர்வால் வெற்றி பெற்றுவிடுகிறார்கள். அது எப்படி? நமது கல்வி முறையில் சீர்கேடா அல்லது நீட் கல்வியின் வரன்முறையா? இந்ததமிழ்நாட்டு கல்வித்துறை வல்லுனர்கள் ஆராய்ந்து வள்ளுவர் கூறியதுபோல
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து. குறள் 879
எங்கே தவறு நடக்கிறது என்பதை ஆராய்ந்து அதனைக் களைந்து ஏழை எளிய கிராமப்புறத்து மாணவர்களுக்குப் பயனாக்கும் முறைகளை நடைமுறைப்படுத்துவதை விடுத்து, நீட் தேர்வுக்காகவே ஆங்காங்கே முளைவிட்டுகிளைத்துள்ள ஆயிரக்கணக்கான கார்ப்பரேட் கோச்சிங் நிலையங்களை ஊக்கப்படுத்துவதுதான் நெறிமுறையா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நேற்று வெளிவந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தியில் ஆசிரியர்பணிக்குத் தேர்வு எழுதிய இரண்டரை லட்சம் பேர்களில் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர்கள் தகுதி பெறவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளதைப் படிக்கும் பொழுது மனம் பாரதி பாடிய நெஞ்சுபொறுக்குதில்லையே என்ற வரிகள் கண்முன்னே தோன்றுகின்றன.
அது எப்படி ஆசிரியர் பணிக்கான பி.எட். பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், எங்கோ இடிக்கிறதே? பி.எட். தேர்வில் குறையுள்ளதா? தகுதித் தேர்வில் வரன்முறை சரியில்லையா? எது தவறு என்பதையார் கண்டுபிடித்து சரிசெய்யவேண்டும்?
சமீபத்தில் நடந்த +2 தேர்வில் ஏறக்குறைய 50,000 மாணவர்கள்தேர்வுக்கு வரவில்லை என்ற செய்தியினை ஊடகங்கள் தெரிவித்தபோது தமிழகத்தில் கற்றவர் எல்லாம் அதிர்ந்து போயினர். என்ன காரணம்? ஏன் தேர்வுக்கு வரவில்லை? இதற்குப் பின்னர் பலர் பல்வேறு காரணங்களைக் கூறினார்கள். எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அனைத்து மாணவர்களும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதை எண்ணும்போது சுதந்திர நாட்டில் இத்தனை அவலமா? இதற்கு எதற்குப் பள்ளி, பள்ளி ஆசிரியர்கள், உதவிக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வித்துறை? இவையெல்லாம் செயல்படுகின்றனவா? என்பதோர் ஐயம் உருவாகிறது. கண்டுபிடிப்போம். நடவடிக்கை எடுப்போம் என்பது சரியான பதில் இல்லை என்பதை உணர்ந்தே இந்தப் பதிலையும் அரசும், கல்வித்துறையும் சப்பைக்கட்டுக் கட்டுகின்றன.
“தமிழ்நாட்டின் மொழி தாய்மொழி தமிழ் என்பது உறுதியானதுதானே.
அப்படி இருக்கும்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கர்கள்,
கன்னடர் கள் வாழ்கிறார்கள். அவர்களது பிள்ளைகளுக்கு நடக்கும்
தேர்வுக்கு வினாத்தாள்கள் மட்டும் தெலுங்கு கன்னட மொழிகளில்
அந்த மாவட்டத்துக்கு மட்டும் மாற்றம் செய்வது ஆட்சி மொழி
தமிழாக வேண்டும் என்ற அறிவிப்புக்கு முரண்பாடாக இல்லையா?
தமிழ்நாட்டில் வாழ்கின்ற இவர் தமிழ் மொழியை எழுத்துகளுடன்
கற்க மாட்டார்களா?”
வேலை வாய்ப்பு என்பது இன்றையசூழலில் குதிரைக் கொம்பாகவேஇருந்து வருகிறதே. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்கள்தொகையிலும் மிகப்பெரிய நாடு;இங்கே கற்றவர்களுக்கு வேலைஇல்லை என்று கூறுவது பொருந்துமா?சற்றே விலகி நின்று எட்டிப் பாருங்கள்.தமிழ்நாட்டுக்குள் ஏறக்குறைய இரண்டு கோடிக்கு மேல் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது மட்டும் எப்படி? ஏன்? யோசிக்கவேண்டாமா? வந்தாரை வாழவைக்கும் வையகம் என்று பேசிக் கொண்டே போனால் நாம் வாழ்ந்திட இடம் வேண்டாமா? இதற்கு மாற்று யோசனை ஏதாவது சிந்தித்துச்செயல்படுத்த முடியுமா?
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். குறள் 1040
இந்தக் குறளுக்காவது யோசிக்கவேண்டாமா? இந்தத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற, பணிபுரிகின்ற கல்வியாளர்கள். இவர்களும் இந்ததமிழ்நாட்டின் குடிமக்கள்தானே.
அரசமைப்பு என்பது எவ்வளவுபெரிய நீண்டதொரு சங்கிலித் தொடரான அமைப்பு. இதில் தேர்வு நடத்துவதற்கு எத்தகைய விதிமுறைகள்,கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றையும் மீறி தேர்வுக்கு முன் வினாத்தாள்கள் வெளியாவதும், வினாத்தாள்கள் இடம்மாறிச் செல்வதும் தமிழில்நடக்கும் தேர்வுக்கு ஆங்கில வினாக்களும் எப்படி இடம்பெறுகின்றன?எப்படி நடைபெறுகின்றன? எங்கே இந்த ஓட்டை வெளிப்படுகிறது? யார் இந்த பிழையாளி? ஏன் இதைமுன்கூட்டியே உணர முடியவில்லை? நடைமுறை, செயல்முறை, விதிமுறைகளில் இடர்ப்பாடா? இயலாமையா? கயமைத்தனமா? இதற்கெல்லாம் போலித்தனமான விளக்கத்தைக்கொடுத்து விடுவதுதான் முறையா?
“தமிழ்நாட்டின் மொழி தாய்மொழி தமிழ் என்பது உறுதியானது தானே.அப்படி இருக்கும்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கர்கள், கன்னடர்கள் வாழ்கிறார்கள். அவர்களது பிள்ளைகளுக்கு நடக்கும் தேர்வுக்கு வினாத்தாள்கள் மட்டும் தெலுங்கு கன்னட மொழிகளில் அந்த மாவட்டத்துக்கு மட்டும் மாற்றம் செய்வது ஆட்சிமொழி தமிழாக வேண்டும் என்ற அறிவிப்புக்கு முரண்பாடாக இல்லையா? தமிழ்நாட்டில் வாழ்கின்ற இவர் தமிழ் மொழியை எழுத்துகளுடன் கற்க மாட்டார்களா?”
இது போகட்டும். தமிழ்நாடு தேர்வாணையம் அறிவிக்கும் அரசுப் பணி தேர்வுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் போதும், அவர் எந்தநாட்டுக்காரராகவும் இருந்தாலும்டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதி தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேரலாம் என்பது என்ன நியாயம்?இப்போதே ரயில்வே, தொலைபேசி,வங்கி, விமானம், ராணுவம் இவற்றில் தமிழ்நாட்டுக்குள் தமிழ் தெரியாத மக்கள் தான் 99.90 சதவீதம் பணியில் இருக்கிறார்கள். அப்படியானால் இந்தத் தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போவார்கள்? அரை பிளேட் பிரியாணி, குவாட்டர் பாட்டிலுக்கு”ஜே ஜே என்றும் வாழ்க என்றும்’கூப்பாடு போடத்தான் இந்தத்தமிழர்கள் லாயக்கா?
பட்டியலை நீட்டிக் கொண்டே போவதால் பயனேதும் இல்லை.இந்தக் குற்றச்சாட்டுகள், குறைகள் பட்டியல் நடந்து கொண்டிருக்கும்.மாநில ஆட்சிக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கும் பொருந்தும். வள்ளுவர் கூறுகிறார். ஒரு அரசன் எப்படி செயல்பட வேண்டும்?
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட் டதனோடு நேர். குறள் 550
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். குறள் 549
சுட்டிக்காட்ட வேண்டியது என்போன்றோர் கடமை. ஏற்பதும் தவிர்ப்பதும் ஜனநாயக உரிமை. ஆனாலும் நாடு சுபிட்சமாக இருக்க வேண்டுமென்றால் ஒன்று கட்டாயம் செய்தே ஆகவேண்டும். அதுதான் வேருக்குத்தண்ணீர் ஊற்றுதல். அதைவிடுத்து இலைக்குத் தண்ணீர் பீச்சியடித்தால் மரமே பட்டுப் போய்விடும். எனவே,எங்கே குறை, ஏன் குறை ஏற்பட்டது? எதனால் குறை உருவானது? அதை எப்படிக் களைவது என்பதை அரசு பொறுப்புடனும் பொறுமையுடனும் கவனித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
– பாரதியார்
என்ற பாரதியின் வாக்கு மெய்ப்பட மனதில் உறுதியோடு உழைப்போம்.
வணக்கத்துடன்
டாக்டர் கி.முத்தையன்
ஆசிரியர்
No comments yet.